Friday, May 29, 2009

காலங்கள் மாறினாலும் #2..

ஹாய் மக்கள்ஸ்..

எனது "காலங்கள் மாறினாலும்.." என்ற இடுகையில் அன்றைய கற்காலம் முதல் இன்றைய கம்பியூட்டர் காலம் வரையிலான ஆறு வகை காலங்களை படங்களுடன் வெளியிட்டிருந்தேன்..

அவை..
1. கற்காலம் 2. உலோககாலம் 3. இரும்பு காலம் 4. இருண்ட காலம் 5. தொழிற்காலம் 6. கம்பியூட்டர் காலம் என்பனவாகும்..
அதற்கு பின்னூட்டமாய் நண்பர் "thevanmayam" என்பவர் அடுத்து என்ன காலம் என்று கேட்டு இருந்தார்..

அவரின் கேள்விக்கு பதிலாய் இங்கு ஏழாவது காலமாய் "AI" என்று சுருக்கமாய் அறியப்படும் "ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்" காலத்தை இணைக்கின்றேன்..

7. AI காலம்..(மேலே உள்ள ஆறு காலங்களுடன் இதனையும் இணைத்துக்கொள்ளுங்கள்..)
என்னடா படத்தில் கணினியின் கை கற்கால மனிதனின் கை போல் கரடுமுரடாக உள்ளதே என்று நினைப்பவர்களுக்கு..


இது மனிதனின் கற்காலத்தை போல், ‘ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்’இன் கற்காலம்..

இதன் பின், பல பரிணாம வளர்ச்சிகளை கண்டு, பின் கம்பியூட்டர் கால மனிதனை போன்று நம் ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ் ஆனது நாகரிகமான உருவத்தை அடையும்..
(அப்போது மனிதனின் கதி..?)

Tuesday, May 26, 2009

நான் யாரென அறிய 32 கேள்விகள்..

'நிலாவும் அம்மாவும்' அவர்களின் ஆக்கத்தால் தொடங்கப்பெற்ற “கேள்வியும் பதிலும்....” என்ற இந்த சங்கிலித்தொடர் இடுகையில், பலரின் தொடர்ச்சியான இணைப்புகளுக்குபின் இணைந்த “இராகவன், நைஜிரியா” அண்ணா அவர்கள், அவருக்கு அடுத்து என்னையும், என்னுடன் சேர்த்து ரம்யா அக்காவையும், டக்ளஸ் அவர்களையும் இணைய அழைத்துள்ளார்..

32 கேள்விகளுக்கு கல்லூரித்தேர்வில் பொறுமையாக பதிலளித்து இருந்தால், பட்டதாரி (ஆனாலும்)ஆகி இருப்பேன்..

32 கேள்விகளுக்கு பொறுமையாக இன்டெர்வியுவில் பதிலளித்து இருந்தால், அந்த கம்பெனியின் ஊழியன் (ஆனாலும்)ஆகி இருப்பேன்..

32 கேள்விகளுக்கு பொறுமையாக மேடையில் பதிலளித்து இருந்தால், பேச்சாளனாக (ஆனாலும்)ஆகி இருப்பேன்..

ஆனால், இங்கு, இந்த 32 கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிப்பது என்னை நானும், நீங்களும் அறியமுடிவதற்கான நற்களமாய் அமைந்ததில் மகிழ்ச்சியே..

இதுவரை இணைக்கப்பெற்றவர்கள்..

ரவீ
அத்திரி
கடையம் ஆனந்த்
ஹேமா
கார்த்திகைப் பாண்டியன்
குமரை நிலாவன்
சிந்துகா
தேவா
வேத்தியன்
என் உயிரே... அபுஅஃப்ஸர்
இராகவன், நைஜிரியா

இவர்களுக்கு அடுத்ததாய் என்னை இணைய அழைத்த “இராகவன், நைஜிரியா” அண்ணாவிற்கு நன்றிகள் சொல்லிண்டு, என்னை அறிவதற்கான கேள்விகளை சந்திப்போம்..


இனி கேள்விகளும் எந்தன் பதில்களும்..

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

இது என் பெற்றோரின் விருப்பத்தால் வைக்கப்பட்டது..
இது எனக்கு பிடிக்கிறதா என்று இதுவரை நினைத்துபார்க்கவில்லை..

கண்டிப்பாக "பிடிக்காது" என்பது என் பதில் இல்லை.. :)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

எதுவும் நிரந்தரம் இல்லை என்ற மனப்பான்மையில் வாழ்பவன் நான்..

எனவே எதற்கும் பீல் பண்ணிக்கொண்டு கண்ணை கசக்குவது கிடையாது..

இருப்பினும், எனது ஏழாவது செமஸ்டரின் ஆரம்பத்தில் வாங்கிய 13 அறியர்களை நினைத்து என் பெற்றோர் கலங்கிவிடகூடாது என்பதற்காக அவர்களை முந்திக்கொண்டு முதலைக்கண்ணீர் வடித்து அவர்களை என் அரியர் பற்றின கவலையில் இருக்கவிடாமல் என்னை தேற்ற அவர்களை திசை திருப்பினேன்..

உண்மையில் நான் கடேசியாக அழுதது ஒன்பதாம் வகுப்பில் என்னை என் சக தோழர்களிடம் இருந்து பிரித்து, ஒன்பதாம் வகுப்பின் வேறு பிரிவில் அமர்த்தப்பட்டபோது..

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

உண்மையில் நான் இடதுகை பழக்கமுடையவன்..

என் நான்காம் வகுப்புவரை பாடம் சொல்லிகொடுத்த ஆசிரியை, என்னை வலுக்கட்டாயமாக வலதுகையால் எழுத எடுத்த முயற்சியால் இப்போதும் என் கையெழுத்து அந்த நான்காம் வகுப்பு மாணவனின் கையெழுத்து போல கிறுக்கலாக தான் இருக்கும்.. (கம்முனு டாக்டரா போயிருந்திருக்கலாம்..)

இருப்பினும் எனது கையெழுத்தை நானே விட்டுக்கொடுக்கமுடியுமா..?
ஆகவேவேவேவே..

பி..டி..க்..கா..து..

4.பிடித்த மதிய உணவு என்ன?

இதுதான் என்றெல்லாம் பாரபட்சம் பார்ப்பது இல்லை.. நீந்துவன தவிர கிடைப்பவை எல்லாத்தையும் பிடிக்கும்.. (பிடிப்பவை எல்லாம் கிடைக்குமானு தெரியலை..)

ஆனாலும் அளவோடு உண்டு நிறைவாக வாழ்பவன் நான்..


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கண்டீடீடீப்பா..
(ஒருமுறை பேசிவிட்டாலே தொடர்ந்து அவரிடம் நட்பு / தொடர்பு வைத்திருக்க விரும்புபவன்..)

ஆனாலும் எப்போதும் நெருக்கமான நட்பாக இருப்பினும், இவரின் நட்பு இல்லையேல் வடக்கிருந்து உயிர் நீப்பேன் மாதிரி யாரிடமும் நட்பு பாராட்டுவது இல்லை.. இதனால் எந்த உறவின் பிரிவும் சீக்கிரம் என்னை பாதிப்பது இல்லை..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கண்டிப்பா கடலில் தான்..
அருவிக்குளியல் அந்த குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சுற்றளவில் முடிந்துவிடுகிறது..
கடலில் அப்படி இல்லை.. அதன் எல்லைகள் விஸ்தாரமானது.. எனவே கடல்தான்..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவரின் கண்களை..
(அந்த கண்களின் சக்தி அபாரமானது.. மேலும், ஒருவரின் மனநிலையை அவரின் கண்களே நன்கு பிரதிபலித்துவிடும் என்ற நம்பிக்கையில்..)

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம் (சில)..
1.நல்லது கெட்டது எதுவாகினும் பெரிய ஆரவாரம் இல்லாமல் ஏற்றுக்கொள்வது..
(வந்த பின்பு மாற்ற முடியாது.. அப்புறம் ஏன் அந்த தேவையில்லாத சந்தோசம் துக்கம் போன்ற பீலிங்க்ஸ் என்பதனால் இப்படி..)
2.எதிரியாய் இருப்பினும் நம்பி வந்துவிட்டால் முழுமனதுடன் ஆதரிப்பது..

பிடிக்காத விஷயம்..
முன், பின், சைடு, மற்றும் இன்னபிற கோபங்களின் தலைவனான மிஸ்டர் கோபாதிபதி..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

(இப்போதைய) என் சரிபாதியிடம் எனக்கு பிடித்தவை..

1. 17 இன்ச் Wide screen மானிடர்..
2. கருப்பு நிற கீபோர்ட் மற்றும் மவுஸ்..
3. சிலிம் டைப் காபினெட்..
4. 340GB ஹார்ட் டிஸ்க்..
(இன்னும் பல..)

என் சரிபாதியிடம் எனக்கு பிடிக்காதவை..

1.அடிக்கடி வைரஸ், மால்வேர் என்று கண்டதயும் உள்ளே விட்டுக்கொண்டு மாரடிக்க வைக்கும்..
2. தூசி இல்லாமல் அடிக்கடி துடைத்து வைக்கசொல்லும்..

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என் கல்லூரி நட்புக்கள்..
இதற்காகவே, மீண்டும் கல்லூரி நட்பை அனுபவிக்க இந்த கல்வி ஆண்டில் PG படிக்கலாமென முடிவுசெய்து நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முன்றபோது அதற்கான கடேசி தேதி முடிந்திருந்தது..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

(பெரும்பாலான நாட்களைபோல்) கருப்பு நிற பேன்ட், சட்டை மற்றும்ம்ம்.. (போதுமே..)


12.என்ன பார்த்து / கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

டைப்பும் போது எதைப்பார்ப்பது..? என் சரி பாதியின் மானிட்டரைதான்..

இப்படி இடுகையிடும்போது வேறு எதையாவது கேட்டுக்கொண்டிருந்தால் கவனம் சிதறுவதால் பிரத்தியேகமாக எதையும் கேட்டுக்கொண்டு இருக்கவில்லை..

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு வர்ணமாக..

14.பிடித்த மணம்?

இதுதான் என்று தனியே ஏதும் இல்லை..

அப்பா வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது வரும் பெட்ரோல் கலந்த புகைமணம் முதல்..,
அழகான, ஆழமான மணம் தரும் மல்லிகை, ரோஜா போன்றவைவரை அனைத்துமே.

சிறு வயதில்,கிராமத்தில், அந்த பெட்ரோல்புகையினை முகர்வதற்க்காகவே வண்டியை ஸ்டார்ட் செய்யும்போதெல்லாம் வண்டியின் பின்னால் ஆஜர்ஆவது வழக்கம்.. (இப்போதெல்லாம் நகர் முழுவதும் இலவசமாய் கிடைக்கிறதே..)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கண்ணுங்களா, ஒருத்தர பிடிக்காததற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்..
ஆனா, பிடித்திருப்பதற்கு (என்னால்) காரணமே சொல்ல முடியாது..
சிம்ப்ளி பிடிச்சிருக்கு.. அவ்ளோ தான்..
(பி.கு: இது சத்தியமாக மழுப்பல் இல்லை..)

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு
பிப்ரவரி 13, 2003
சேமிப்பின் அவசியம்

(இப்படி குறிப்பிட்டு சொல்வது, 'அனைத்தும்' என்று சொன்னால் மழுப்பல் என்று சொல்வீர்கள் என்பதற்காக அல்ல..)


17. பிடித்த விளையாட்டு?

சிறுவயது முதல் கில்லி, கோலி, பம்பரம், அப்போது விளையாடி (இப்போது பெயர் அறியப்பட்ட) பேய்ப்பந்து....
அதன் பின்பு, இவற்றுடன் கிரிக்கெட்..
இப்போது, கம்பியூட்டர் 3D வீடியோ கேம்கள்..

18.கண்ணாடி அணிபவரா?

ஆம்..
உபயம் எங்கள் வீட்டின் அப்போதைய ரிமோட் இல்லா தொலைகாட்சிப்பெட்டி..:)

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

மொக்கை முதல் சர்வதேசத்தரம்வரை எதையும் பார்க்கும் வலிமை உடையவன்..

(எல்லாரும் நல்லதையே ஆதரித்தால் மத்தவற்றை யார் கரையேற்றுவது..?
நல்லது கெட்டது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் இல்லையா..? அதான்..)20.கடைசியாகப் பார்த்த படம்?

அருந்ததீ..
நூறு பேருக்கு நடுவில் தனியாக பார்த்தேன்..

(புரியலையோ..? நண்பர்களுடன் இல்லாமல் தனியே சென்று பார்த்தேன்..)

21.பிடித்த பருவ காலம் எது?

கோடையை தவிர மற்றவை எல்லாம்..

குளிரெனில் போர்த்திக்கொள்ளலாம்..
மழை எனில் முக்காடிட்டுகொள்ளலாம்..
வசந்தகாலமெனில், புதுப்பொழிவுடன் இயற்கை தரும் அழகை ரசிக்கலாம் ..
ஆனால், இந்த கோடைகாலமெனில் எதுவும் செய்ய இயலுவதில்லை.. சீக்கிரம் சோர்ந்தும் போகிறோம். ஆகவே, கோடைக்கு தடா..

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இந்த கணினியை சந்தித்த பின் பேப்பர் வகையறாக்களை கையாள்வது வெகுவாக குறைந்துவிட்டது..
செய்தித்தாள் படிப்பது முதற்கொண்டு கணினியே தேவைப்படுகிறது..

இதில் எங்கத்தபோயி புத்தகம் படிப்பது..
கடந்த இரண்டு நாற்களாக, PDF பார்மேட்டில் உள்ள சுஜாதா அவர்களின் "மீண்டும் ஜீனோ" ஓடிக்கொண்டுள்ளது..

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

தினமும்.. ஆனால் அதே படத்தை..

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த (சில) சத்தங்கள்..
1.வள்ளுவன் மேற்கொண்ட, இன்றைய பொழுதில் என் பெற்றோர் மேற்கொள்ளும், உலக உயிரினங்களின் தேவைக்கான உடைகளை தயாரிக்கும் நெசவுத்தொழிலுக்கு அடிப்படைத்தேவைகளில் ஒன்றான தறி என்று அழைக்கப்படும் இயந்திரத்தின், இன்றைய அட்வான்ஸுடு வெர்சனான பவர்லூம் மெசின்களின் அதிகப்படியான சத்தம்..
(இந்த தொழிலை என் பெற்றோர் செய்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் நல்லெண்ணவகை கர்வமும்கொள்கிறேன்)

2.எங்கள் வீட்டின் பிரத்தியேக FM ஆகிய என் அம்மாவின் தினப்படி ஒலிபரப்புகள்.. எப்படி தான் பேசுறாங்களோ.. தினமும் பேசுறாங்க.. பேசுறாங்க.. பேசிக்கிடே இருக்காங்கப்பா..

அக்கா இருந்தால், அம்மாவின் இந்த திட்டல்களை நாங்கள் இருவரும் சேர்ந்து கலாய்த்து சிரித்தே பொழுதை கழித்துவிடுவோம்..

ஆகவே, அக்கா இருக்கும்போது, அம்மாவின் ஒலிபரப்பு பிடிக்கும்..

பிடிக்காத சத்தம்..

அக்கா இல்லாத போழ்து, கலாய்க்க ஆள் இல்லாததால், அதே ஒலிபரப்பு பிடிக்காது..

(அம்மா.. சும்மானாச்சிக்கும் தான்.. ஏதும் தப்பா நெனச்சுகாதிங்க..)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கோவா (கல்லூரி நண்பர்களுடன்)..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

பார்த்ததை (விட), கையில் கிடைத்துள்ள படங்களை பார்த்து வரைய இயலும்..
(வரைந்தது நல்லா இருக்குமா இல்லையானு எல்லாம் கேக்கப்பிடாது..)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

1. கூட இருந்தே குழி (முதல் கிணறுவரை) பறிப்பது..
2. பொறாமை..
(எந்த ஆமை வீட்டுக்குள் வந்தாலும் பாலாகாத வீடானது, இந்த பொறாமை வந்தால் மட்டும் விளங்காமல் போய்விடும்..)
3.நண்பனின் பிரிவு.. அதுவும் காரணமே புறியாமல் (or) சொல்லாமல் பிரிந்து / விலகிச்செல்லும் நண்பனாய் மதிக்கப்படுபவனின் பிரிவு..
(ஒன்றுக்கும் அதிகமாக கூறியமைக்கு மன்னிக்கவும்..)

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

(எட்டாவது கேள்வியின் இரண்டாம் பாகத்திற்கு சொன்னது போல்) முன், பின், சைடு, மற்றும் இன்னபிற கோபங்களின் தலைவனான மிஸ்டர் கோபாதிபதி..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இதுவரை நான் சென்ற அனைத்து இடங்களும்..
(தென்னிந்தியாவை விட்டு எங்கும் சென்றது இல்லை என்பது உபரித்தகவல்)

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

யாரையும் நிர்பந்திக்காமல், நிந்திக்காமல், நானும் நிர்பந்தப்படுத்தப்படாமல், நிந்திக்கப்படாமல் நான் நானாக இருக்க ஆசை..
(ஆனால்.. என்ன செய்ய..? இந்தமாதிரி நினைக்கும்போதெல்லாம், "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்" பாடல்தான் நினைவிற்கு வருகிறது..)

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

இன்னும் குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து வருடங்கள் காத்திருங்கள்.. திருமணம் முடித்து, பின் சொல்கிறேன்..

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

என்ன புதுசா சொல்லிடபோறேன்..
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவரின் சொத்து..
ஏதும் நினைத்தது கிடைக்கவில்லையேயென எண்ணாமல், கிடைத்ததை வைத்து சிறப்பாக வாழ்வதே வாழ்க்கை..

********


இதே கேள்விகளுக்கு தன்னுடைய பதில்களை சொல்வதற்கு

~சக்கரை~ சுரேஷ்

அவர்களை அழைக்கிறேன்..

(ஜமால் அண்ணாவை ஏற்கனவே பலர் புக் செய்துவிட்டமையால், அவரையும், எனது பதிவுலகிற்கு இரண்டாவதாக அறிமுகமான சிபி அண்ணாவை ஏதோ சில காரணங்களால் சில நாட்களாக தொடர்புகொள்ள இயலாமையால், அவரையும், மற்றும் சில காரணங்களால் சிலரையும், பல காரணங்களால் பலரையும் அழைக்க முடியாதது வருத்தமே..)

(சபா.. எப்டியோ) என்னால் முடிந்ததை நண்பனுக்கு செய்துவிட்டேன்.. நல்லபடியா நீங்களும் வந்து எங்கள் அன்புச்சங்கிலியில் இணைய அழைக்கிறேன்.. வாருங்கள் நண்பா..


Thursday, May 21, 2009

காலங்கள் மாறினாலும்..

என்ன தான் மனிதன் அன்றைய கற்காலம் முதல் இன்றைய கம்பியூட்டர் காலம் வரை வளர்ச்சி அடைந்து இருந்தாலும் சில குணங்கள் மட்டும் அவனிடம் என்றும் மாறாமல் அப்படியே இருந்துவருகின்றன..

கீழே உள்ள படங்களை பார்த்தாலே உங்களுக்கு விளங்கிவிடும் இவனைப்பற்றி..


1.கற்காலம்..
இங்க ஆரமிச்ச வினை தான்.. இன்னமும் தொடருது..


********************

2. உலோககாலம்..

பார்ரா.. கல்லவிட்டுட்டு, கைல காப்பெல்லாம் போட்டுக்கிட்டு சுத்தியல பயன்படுத்தராங்கப்பா.. நல்ல முன்னேற்றம் தான்.. (ஆமா, அது என்ன உலோகம்னு சொல்லவே இல்லையே..?)

********************

3. இரும்பு காலம்..

ஒரே டமால் டுமீல் தான்..
தட்டுங்க எசமான் தட்டுங்க..
உங்களால தான் இப்போ இங்க இப்டியெல்லாம் போய்ட்டு இருக்கு..

(இரும்பும் உலோகம் தானே.. அதென்ன தனியா இரும்பு காலம்னு எல்லாம் கேக்கபிடாது..)(என்னாது இது.. துப்பாகிங்களா..? தமாசு தான் போங்க.. :))

4. இருண்ட காலம்..

உங்களால வெச்சாங்க பாருங்க எங்க அமைதிக்கு எல்லாம் ஒரு ஆப்பு.. சபா முடியலை..
இந்த போர் எல்லாம் எப்போ முடியும்னும் தெரியலை..

********************

5. தொழிற்காலம்..

இன்னுமா தட்டிகிட்டு இருக்கீங்க..?!

********************

6. கம்பியூட்டர் காலம்..

சபாஸ்..
என் இனமடா நீ..என்ன பாஸ்.. தலைப்பு சரி தானே..?

காலங்கள் மாறினாலும்.. நாம் கொண்ட கோலங்கள் மாறினாலும்..
மேலே சொன்னது மட்டும் என்றும் மாறப்போவது இல்லை..

ஆகவே..
நீங்களும் நம் பரம்பரை குணாதிசயத்தை காக்க,
பொட்டி தட்டுங்க..
             தட்டுங்க..
             தட்டிகிட்டே இருங்க..


Tuesday, May 19, 2009

மீண்டும் யூத் ஃபுல் விகடனில்..

அன்புள்ள யூத் ஃபுல் விகடனார் அவர்களுக்கு..

என் "அன்பின் வடிவாய் ஆட்டோ ஓட்டிகள்..!" என்ற இடுகையை விகடன் குட் ப்ளாக் லிஸ்ட்டில் பிரசுரத்துள்ளமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..
சென்ற மாதம் ஏப்ரல் 30 அன்று என் "49-O'வும்..!! கிராமங்களில் 49-O'வும்..!!" என்ற இடுகையை விகடன் குட் ப்ளாக் லிஸ்ட்டில் பிரசுரித்து என்னை மகிழ்ச்சி கடலில் திக்குமுக்காட செய்து, மீண்டும் எந்தன் இந்த "அன்பின் வடிவாய் ஆட்டோ ஓட்டிகள்..!" என்ற இடுகையை (இன்று 19.5.2009) பிரசுரித்து என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தும் விகடனார் அவர்களுக்கு மீண்டும் (பல முறை) என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், மகிழ்ச்சியான இத்தருணத்தில், என்னை தொடர்ந்து எழுத உற்சாகமூட்டி, கண்ணாபின்னாவென்று ஆதரிக்கும் என் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பலவற்றை கூறிக்கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்..

என்றும் நன்றிகளுடனும்,
சுரேஷ்.


Friday, May 15, 2009

அன்பின் வடிவாய் ஆட்டோ ஓட்டிகள்..!

தலைப்பு எப்படி இருக்கு..? தலைப்ப கேட்டாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறுதோ..?

இது நான் (பெங்களூருவில்) சந்தித்த மற்றும் (சென்னையில்) கேள்விபட்ட இரண்டு ஆட்டோ ஓட்டிகளை பற்றியது..


பொதுவாக நமக்கு ஆட்டோ டிரைவர்கள் என்றால் உடனே நியாபகம் வருபவைகளில் சில, அவர்களின், மீட்டருக்கு சூடு வைத்து பணம் பறிக்கும் செயல், கிட்டக்க உள்ள இடத்தை அங்கே இங்கே என்று சுத்தி பயண தூரத்தை அதிகரித்து பணம் பார்ப்பது, எகத்தாளமான பேச்சுகள் நடவடிக்கைகள், சில ஏமாற்று வேலைகள் இவைகள் தான்..


ஆனால் எதிலும் நல்லது கெட்டது உள்ளது போல், இவர்களின் கூட்டத்திலும் சில சேற்றில் முளைத்த செந்தாமரைகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி ஒரு ஆட்டோ டிரைவரை நான் சந்தித்தது பெங்களூருவில்..


சென்ற வருடம், ஆறு ஏழு மாதங்களாக அனிமேசன் துறையில் வேலைதேடிக்கொண்டு இருந்த போழ்து, சமயத்துக்கு உதவும் வகையில், கோயமுத்தூரில், இருவர் மட்டுமே கொண்ட அலுவலகத்தில், மூன்றாவது ஆளாக, வெப் டெக்னாலஜி துறையில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது..


சரி சும்மா இருப்பதற்கு இதிலாவது வேலை செய்யலாமென பொட்டியை கட்டிக்கொண்டு, பேருந்து நிலையம் செல்ல ஆட்டோ ஒன்றை அழைத்தேன்.. அவரிடம் வாடகை எவ்வளவு என கேட்டதற்கு அவர் சொன்னது 120 ரூபாய் என நியாபகம்.. சிறிது நேர பேரத்திற்கு பிறகு அவர் சொன்னது 100 ரூபாய்.. நான் கேட்டது 70 ரூபாய்.. ஆனால் அவர் 100 ரூபாய்க்கு கீழ் மசியவில்லை..


சரி தொலையட்டும் என்று ஏறி உக்காந்தவுடன் பேச்சுகொடுக்க ஆரமித்தார்.. நான் கொண்டுசென்ற கணினியின் பெட்டியில் தமிழில் எழுதி இருந்ததை பார்த்து நீங்க தமிழா என கேட்க இருவருமே தமிழ் தான் என அறிந்து இருவருமே மகிழ்ந்தோம்.. அவர் அவரது மனைவி, குழந்தைகள் என்று அவரின் குடும்பத்தை பற்றி விலாவாரியாக சொல்லிவிட்டு, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்.. இப்போ எங்கே போய் கொண்டு இருக்கிறேன் என்றெல்லாம் விசாரிக்க ஆரமித்தார்..


நானும் வேலை தேடி அலைந்துவிட்டு இப்போது செய்ய போய்க்கொண்டு உள்ள வேலையை பற்றி எல்லாம் சொன்னதும், அவரால் எனக்கு இந்த IT துறையில் உதவ முடியுமெனவும், உதவி வேண்டுமா எனவும் கேட்டார்.. எனக்கு ஆச்சரியம் மேலோங்க, உங்களால் எப்படி முடியுமென கேட்டேன்..


அவர் ஆட்டோ ஓட்டும் போது, சில சமயம் பகுதி நேர வேலையாக சில IT துறையில் மேல்மட்டத்தில் உள்ள பலருக்கு அவர்களின் கார் டிரைவராக வேலை செய்வதாகவும், அதில் பலர் இவருக்கு ரெகுலர் கஸ்டமர் எனவும் சொன்னார்.. இவரின் சிபாரிசின் பேரில் சிலருக்கு வேலையும் கிடைத்திருப்பதாகவும், நான் விரும்பினால் எனக்கும் உதவுவதாகவும் சொன்னார்..


உண்மையில் அவரால் முடியுமோ இல்லையோ, சும்மா உதவிசெய்கிறேன் என்று ஒரு ஜீவன் சொல்வதே நமக்கு புது உற்சாகத்தை கொடுக்குமல்லவா.. இருப்பினும், இப்போது எனக்கு இந்த துறையில் அனுபவம் என்று ஏதும் இல்லை. இப்போது கிடைத்துள்ள வேலையில் ஒருவருடமாவது பணியாற்றி கிடைக்கும் கொஞ்சநஞ்ச அனுபவத்துடன் அடுத்த ஆண்டு வேண்டுமானால் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்..


அவரோ விடாப்பிடியாக அவரது கைப்பேசி என்னை கொடுத்து கண்டிப்பாக அழைக்கவேண்டுமென கூறி பாசமழையை பொழிந்துவிட்டார்.. பேருந்து நிலையம் வந்ததும் ஏற்கனவே பேசியது போல் 100 ரூபாயை கொடுக்கவும், நான் சொன்ன 70 ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார்..


பேசிய பணத்தைவிட அதிகமாக பிடுங்கிக்கொள்ளும் இந்த காலத்தில், இப்படி அவர் செய்தது உண்மையில் உள்ளுக்குள் என்னை ஏதோ செய்துவிட்டது.. பின் நான் வீட்டுக்கு வந்தபிறகு, ஆறு மாதங்கள் கழித்து, சும்மா அழைத்து பார்க்கலாமென அவரை அழைத்தபோது, டக்கென அடையாளம் கண்டுகொண்டு நலம் விசாரித்தபோது மிகவும் நெகிழ்ந்துவிட்டேன்..


ஒருசில நிமிடங்களில் முடிந்துவிட்ட ஒருபயணத்தில் இப்படி ஒரு நல்ல உள்ளத்தினை கண்டத்தில் எனக்கு இப்போவும் ரொம்ப பெருமிதம் உண்டு..

+++++++++++++++


அடுத்து நான் சொல்லப்போவது சென்னையில் ஒரு ஆட்டோ டிரைவரை பற்றி..


என் பக்கத்து வீட்டு இளைஞான் ஒருவர் ஸ்ரீலங்காவில் ரோட்டோரம் நடை பாதையில் துணிவிற்கும் தொழில் செய்துவந்தான். அவன் உள்ள இடமோ ஏதோ கடல் பகுதிக்கு அருகிலாம்.. ஒருநாள் அவன் அந்த கடல் பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்த போதுதான் சுனாமி பேரலை உருவாகி அந்த ஏரியாவையே நாசம் செய்து உள்ளது..


எதிர்பாராத இந்த நிகழ்வின் போது மயக்கமடைந்துவிட்ட அவர் கண்விழித்தபோது இருந்தது 35 to 40 கிலோமீட்டர்கள் தள்ளி இதுவரை அவர் சென்றிராத ஏரியாவில் அமைந்த ஒரு சிறு குன்றில் வெறும் ஜட்டியுடன், ஒரு கை உடைந்த நிலையில் படுத்துகிடந்துள்ளார்..


எப்படியோ அங்கு நிவாரண பொருளாக கிடைத்த ஆடைகளை உடுத்திக்கொண்டு, அங்கு இருந்தவர்களின் உதவியுடன் சென்னை இரயில் நிலையம் வந்து சேர்ந்துள்ளார். ஆனால் அங்கு இருந்து சொந்த ஊரான ஈரோட்டுக்கு வரவும், அப்போதைய பசிக்கு தேவையான உணவை வாங்கவும் அவரிடம் பணம் இல்லை..


ஒன்றிரண்டு நாட்கள் அவர் சாப்பிட்டு இருக்கவில்லையென நியாபகம்.. அந்த நெடிய பசி மயக்கத்தில், உடைந்த கையுடன், இரயில் நிலையத்தின் வெளிப்புறத்தில் சுற்றிக்கொண்டு இருந்ததை பார்த்து ஒரு ஆட்டோ டிரைவர் என்னவென்று விசாரிக்க, இவர் நடந்ததை சொல்லி இருக்கிறார்..


உடனே, அந்த ஆட்டோ டிரைவர், அவரின் சொந்த செலவில் இவரின் பசியாற்ற உணவு வாங்கி கொடுத்து, ஊருக்கு இரயில் டிக்கெட்டும் எடுத்துகொடுத்து, அவரை வண்டி ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு, ஊரில் உள்ள இவரின் உறவினருக்கும் போன் செய்து தகவல் கொடுத்து உள்ளார்..


எந்த பிரதிபலனும் எதிர் பாராமல் அவர் செய்த அந்த உதவியை என்னவென்று சொல்வது..? ஆட்டோ டிரைவர்கள் என்றாலே, அதுவும் சென்னையில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் என்றாலே வெறுப்பின் உச்சத்தை அடையும் நமக்கு இவரை போன்றவர்கள் கண்ணுக்கு தட்டு படுவதே இல்லை(யோ)..


இவர்கள் மூலம் நான் அறிந்த ஒன்று, எங்கும் எதிலும் நல்லதும் இருக்கும் தீயதும் இருக்கும்.. தீயதை மட்டுமே காண சாத்தியப்பட்ட இடத்திலும் கூட கண்டிப்பாக கொஞ்சமேனும் நல்லவையும் இருக்கும்..

அப்புறம்.., இவர்கள் இருவருக்குமே எனது நன்றிகள் உரித்தாகுக..


Saturday, May 2, 2009

தீவிரவாதியின் வயது 18..

தலைப்ப பாத்துட்டு.. ஏதோ கதை சொல்ல போறேன்னு தப்பா நெனச்சுடாதிங்க..

விஷயம் இதுதான்..

நமது இந்திய சட்டமுறைப்படி குற்றவாளிகள் அவர்களின் வயதினை அடிப்படையாக கொண்டு, 18 வயதிற்கு கீழ் இருப்பின், அவர்களின் வழக்கு சிறார் நீதிமன்றத்திலும், 18 வயதிற்கு மேல் எனில், இந்த சிறார் நீதிமன்றங்களை தவிர்த்து பிற நீதிமன்றங்களில் வழக்கு விசாரிக்கப்படு(மா)ம்..


அண்மையில் நடந்த மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கில் முக்கியக் குற்றவாளியான அஜ்மல் கஸாப் 18 வயதைக் கடந்திருந்தாரா என்பது பற்றி விசாரணை நடத்துமாறு டாக்டர்கள், சிறைக்காவலர்களுக்கு மும்பை தாக்குதல் குறித்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எல். தகிலியானி உத்தரவிட்டு இருந்தார்.


இந்த சோதனைகளின்படி கஸாப் 18 வயதுக்கும் குறைவானவர் என்று தெரியவந்தால், வழக்கு சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்றும், சிறார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டால், சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை மட்டுமே சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்றும் கூறப்பட்டது.


இந்நிலையில், கஸாப்பிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட டாக்டர், அஜ்மலின் எலும்பு வளர்ச்சி, பல் மற்றும் ரத்தம் ஆகியவற்றை பரிசோதித்தில் அவன் 18 வயதுக்கு குறைந்த சிறுவனல்ல, 20 வயதுடைய பெரியவன் என்பது தெரிய வந்ததாக கூறி அதற்கான மருத்துவ பரிசோதனை அறிக்கையையும் சமர்ப்பித்தார்..


இதெல்லாம் ஊரறிந்த ரகசியம்டா..
இப்போ அதுக்கு என்னான்றங்கிரிங்களா..?
இந்த செய்தியால் எனக்கெழுந்த சந்தேகங்களில் சில..

சந்தேகம் 1: ஒருவேளை, அந்த சோதனையின் போது கஸாப்பின் வயது 18'க்கும் கீழ் என அறியப்பட்டிருப்பின், அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையுடன் வெளி வந்திருப்பான். இவ்வளவு பெரிய பயங்கரத்தை நிகழ்த்திய தீவிரவாதியை, அவனது தீவிரவாத செயலை, வெறும் வயது அடிப்படையில் விசாரிப்பது எவ்வளவு ஆபத்தானது..


சந்தேகம் 2: ஒரு வேளை, அவன் உண்மையில் 18 வயதிற்கும் குறைவான சிறுவன் என்பது ஊர்ஜீதமாகி, அவன் 3 ஆண்டுகளில் சிறையில் இருந்து வெளியில் வந்தால்..
இதனை ருசிகண்டுவிட்ட அந்நிய நாட்டினர்கள், அவர்களின் இந்தியா மீதான வருங்கால தாக்குதல்களுக்கு முழுக்க முழுக்க 18 வயதிற்கும் குறைவான சிறார்களை பயன்படுத்தும் நிலையில், இந்தியாவின் நிலை என்னாகும்..


சந்தேகம் 3: அந்த அனைத்து 18 வயதிற்கும் குறைவான சிறார் தீவிரவாதிகளை உயிருடன் பிடித்தாலும் வெறும் (அதிகபட்சமாக)3 ஆண்டுகளில் சந்தோசமாக விடுதலை ஆகி, பின் அவர்களின் சேவையை நம் நாட்டில் தொடருவதற்கான சாத்தியக்கூறுகளின் விகிதம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை தானே..?


சந்தேகம் 4: இந்த கூத்தினை காணும், அந்த அந்நிய நாட்டினில் உள்ள, நம் நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதில் உள்ள சரி தவறுகளை அறியாத, தொடர்ந்து நம்மீதான தாக்குதலுக்காக மூளை சலவை செய்யப்படும் எந்த சிறாருக்கும் தானும் தன் நாட்டிற்காக, தீவிரவாதமெனும் அவர்களின் சேவையை இந்தியாவில் புரிய ஆர்வம் அதிகரிக்கும் என்றே நம்புகிறேன்..
மேலும், கஸாப்பை போல உயிருடன் மாட்டினால், எப்படியும் அதிகபட்சம் 3 ஆண்டுகளில் வெளிவந்துவிடலாமே என்ற அசாத்திய நம்பிக்கையும் ஒருபக்கம் இருக்குமல்லவா..?


தீவிரவாதத்திற்கு எல்லைகள் கிடையாது,
தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது,
தீவிரவாதத்திற்கு மொழி கிடையாது,
தீவிரவாதத்திற்கு நாசவேலையை தவிர எதுவும் தெரியாது,
தீவிரவாதத்திற்கு _____________ கிடையாது,
தீவிரவாதத்திற்கு _____________ கிடையாது,
தீவிரவாதத்திற்கு உள்ள இதுபோன்ற பட்டியலில்..,


தீவிரவாதத்திற்கு வயது வரம்பும் கிடையாது என்பதனை அறிந்தாலன்றி தீவிரவாதத்தினை, தீவிரவாதிகளை கையாள்வதிலும், ஒடுக்குவதிலும் நமக்கு உள்ள சற்று அதிகப்படியான சிரமங்களில் இதுவும் ஒரு பங்கினை கட்டாயம் பெறும்..


தீவிரவாதத்தில் ஈடுபடும் அவர்களை வயதுவரம்பை அடிப்படையாக கொண்டு மனிதர்களாக, சிறார்களாக காணாமல், நாட்டின், நாட்டுமக்களின் பாதுகாப்பிற்கான மிகப்பெரும் அச்சுறுத்தலாக காணாவிடில்.. நாளை இதே தீவிரவாதிகள், முன்னால் சிறார் மற்றும் இந்நாள் வளர்ந்த தீவிரவாதிகளாக உலாவருவர்.. ஆனால் அதைகாண நாமும் இருக்கமாட்டோம், நம் நாடும் நம்மிடம் இருக்காது..


வே.கோ: மறக்காம உங்க வோட்டை குத்திட்டு போங்க எசமான்.. குத்திட்டு போங்க..